

28/03/2010
முதல் பக்கம்.
புன்னகையையும், கண்ணீரையும் விதைக்கும் நிகழ்வுகளை நினைவுகளாய் சிறைப்படுத்தும் முயற்சியே டைரி குறிப்புகள். இவ்விரு உணர்வுகளும் ஒன்றர கலந்தவைகளுள் மேலானது காதல். காதல், சிலருக்கு சிறகுகளாகவும், சிலருக்கு சிலுவைகளாகவும் வாய்க்கப்படலாம். இரண்டின் முடிவிலும், என்றும் ஈரமாக எஞ்சியிருக்கும் அழகான நினைவுகள். சாபங்கள் தூவிய வரங்கள் நிறைந்த என் காதலைப் பற்றிய குறிப்பின் தொகுப்பே இந்த மயிலிறகு பக்கங்கள்.
ஜூலை18ஏதோவொரு நாள்.
உன்னை எப்பொழுது முதன்முதலாக சந்தித்தேனென்பது எனக்கு நினைவில் இல்லை. ஒவ்வொரு விடியலிலும் கண்ணெதிரே தொங்கும் நாட்காட்டியை பார்த்தவுடன் நினைவுபடுத்த முயன்றும் தோற்றுத்தான் போகிறேன். உன்னை காதலிக்கப் போகிறேனென்பதை முன்பே அறிந்திருந்தால் அந்நாள் என் வாழ்நாளின் இன்னுமொரு பிறந்தநாளாயிருந்திருக்கும். அதனாலேயே உன் பிறந்தநாளை உன்னைச் சந்தித்த நாளென்றும் கூடுதலாக கொண்டாடுகிறேன். அன்று யாரோ ஒருவனுடன் நம் கல்லூரி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாய். ஏனைய பெண்களிடமிருந்து தனித்துவிளங்கும் சிறப்பம்சம் எதுவுமில்லாத மற்றுமொரு ஃபிகராகத்தான் இருந்தாய்.
”அங்க பாருடா ஜான் ஆப்ரஹாமும், பிபாசா பாஸுவும்” என்று உன்னையும் அவனையும், நண்பனொருவன் ஆரம்பிக்க, “டேய்.. பிச்சுப்போட்ட பப்ஸ் மாதிரி இருக்கா.. அவள போய் பிப்ஸ் கூட கம்பேர் பண்ற?” என்று கலாய்த்த என்னை முறைத்தபடியே சென்றாய்.
அன்றிலிருந்து சரியாக ஒரு வாரத்தில் உன்னை மறுபடியும் நம் கல்லூரி உணவகத்தில் பார்த்தேன். நண்பர்களிடம் உன்னை மாலை அதே இடத்தில் சந்திக்க வைக்கிறேனென்ற பந்தயத்திற்காக உன்னிடம் வந்து பேசினேன்.
"ஸாரிங்க... அன்னைக்கு பசங்க உசுப்பிவிட்டதாலத்தான் ஓட்டிட்டேன்... தப்பா நெனச்சிக்காதீங்க" என்று நண்பர்களை ஊறுகாயாக்கி உன்னிடம் கடலையின் முதல் அத்தியாத்தை ஆரம்பித்தேன்.
"காலேஜ் வந்ததுக்கு அப்புறம் இதெல்லாம் பழகிப் போச்சுங்க... ஃப்ரீயா விடுங்க.." என்று மன்னிப்பு வழங்கும் தேவதையாய் நீயும் பதில் பேச, அப்போதைய உரையாடலின் முடிவில் நாம் மாலை சந்திப்பதாகவே முடிவெடுத்திருந்தோம். அன்றைய இரவு பந்தையத்தில் தோற்றதனால், அந்த மாதச் செலவுக்காக கொடுக்கப்பட்டிருந்த என் பணமனைத்தும் உதயம் மெஸ்ஸில் மொத்தமாக கரைந்தது. ஏமாற்றிய உன்னை வசைபாடியபடியே விடுதிக்கு வந்து சேர்ந்தேன். அன்று எங்கள் விடுதி தொலைப்பேசி அதிசயமாய் வேலை செய்தததை மன்னிப்புகள் தாங்கி வந்த எனக்கான உன் அழைப்பின் மூலமே அனைவரும் அறிந்து கொண்டனர்.
ஆகஸ்ட் 21.
இன்றுதான் முதன்முதலாக 'உனக்கு வரப்போற பொண்டாட்டிய பத்தி சொல்றேன் பாரு' என்று என் கையைப் பற்றி ரேகைகள் பார்த்தாய். இது ஐந்தாவது முதன்முறை. முதன்முறை காஃபி, முதன்முறை சினிமா, முதன்முறை கடற்கரை, முதன்முறை 'டா' போட்டழைத்தது போக முதன்முறை உன்னுடைய ஸ்பரிஷம். உன்னை முதன்முறையாக நான் கலாய்த்த இடத்திலிருந்து வேறொருவன் நம்மை கலாய்க்கும் நிலைவரை வளர்ந்திருந்தது நம் நட்பு.
அக்டோபர் 17.
புது மாணவர்களுக்காக நடைபெறும் நம் கல்லூரியின் கலைவிழா. 'அக்னி'. உன்னுடன் பழகிய நாளிலிருந்து நண்பர்களை மறந்துவிட்டதாக எழுந்த குற்றச்சாற்றினால் உன்னை விட்டு பிரிந்து நண்பர்களுடன் மட்டுமே நான் களிப்பதாக நமக்குள் ஓர் ஒப்பந்தம். புதிய மாணவர்களை ரேகிங் என்ற பெயரில் தபால்காரனாக்கி தன் காதலிகளுக்கு கடிதமெழுதி அனுப்பிக் கொண்டிருந்தனர் முதிய மாணவர்கள். தொலைவில் பெண்கள் குழுமியிருந்த இடத்தில் அமர்ந்திருந்த உன்னை மட்டுமே பார்த்து கொண்டிருந்தேன் நான்.
"மாப்ள... உன் லவ்வ பார்சல் பண்ணி உன் ஆளுக்கு அனுப்பிட்டோம்ல", என்று என் நண்பன் கூறியபிறகுதான் பார்த்தேன், புதிய மாணவன் ஒருவன் உன்னிடம் என்னை கைகாட்டி கொடுத்தச் சீட்டை. அதை வாசித்தபிறகு என்னை முறைத்துவிட்டு வெளியேறிய உன்னை சமாதானபடுத்த அரங்கிலிருந்து வெளிவந்தபோது நீ அங்கு இல்லை. நீ என்னை புரிந்துகொள்வாய் என்ற நம்பிக்கையில் மறுபடியும் உள்ளே சென்றுவிட்டேன். அடுத்து வந்த அழகிப் போட்டிக்காகத்தான் உன்னை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றேனென்று பிரிதொரு நாள் நீ கிண்டல் செய்தாய்.
அழகிப் போட்டியும் இனிதே ஆரம்பமானது. வரிசையில் வளம் வந்த அழகு நங்கைகளுக்கு மத்தியில், மெல்லிய கறுப்பு வண்ண சேலையில் தேவதைகளின் தேவதையாக, அழகிகளின் அழகியாக நீயும் வந்தாய். நொடியில் ஏற்பட்ட பரவசம், கோபமாகவும் வெறுப்பாகவுமே மாறியது. காரணம் நீ அணிந்திருந்த கவர்ச்சியான கண்ணாடி சேலையும், கைகள் இல்லாத ஜாக்கெட்டும், இன்னும்... "மாப்ள... செம ****டா..." என்று என் முன்னாள் இருந்த ஒருவன் உன்னை பார்த்து சொன்னதும் எழுந்த பெருங்கோபத்தில் அவ்விடத்தை விட்டு வேகமாக விடுதியறைக்குச் சென்றேன். அன்று நீதான் 'மிஸ் அக்னி' என்பதை என் நண்பன் மூலம் அறிந்தேன்.
அடுத்த நாள் உனக்கும் எனக்கும் பெரிய வாக்குவாதம் நடந்தது. கல்லூரி மாணவத் தலைவன் தேர்தலினால் ஏற்கனவே எங்களுக்கு எதிரியாகிவிட்ட மாணவத் தலைவன், நான் இருக்கும்போதே உன்னிடம் வாழ்த்துக்கூறி, அடுத்த நாள் மதியம் விருந்தளிப்பதாக கூறி உன்னையும் பெசண்ட் நகரிலிருக்கும் பொன்னுசாமி் உணவகத்திற்கு அழைக்க, நீயும் சரியென்றாய்.
"இது மாதிரி ஊதாரியா திரியறதா இருந்தா தயவு செஞ்சு என் கூட பேசாத...", ஏற்கனவே கோபத்தின் உச்சத்திலிருந்த நான், உன்னிடமிருந்து அதனை சற்றும் எதிர்பார்க்காதபடியால் என்னையும் மீறி பேசி தொலைத்தேன்.
"அதே தான் நானும் சொல்றேன்... நீ இப்படி இரு.. அப்படி இருன்னு கண்டிஷன் போடுறதா இருந்தா நீயும் தயவு செஞ்சு என்கிட்ட பேசாத", நீயும் வரம்பு மீறியிருந்தாய்.
அன்றிலிருந்து நாம் இருவரும் சந்திப்பதையே நிறுத்தியிருந்தோம்.
ஜனவரி 3.
உன்னைப் பார்த்து பேசி இரண்டு மாதங்களுக்கு மேலாகிறது. ப்ராஜக்ட், தேர்வு, விடுமுறை என்று வரிசையாக இறைவன் அமைத்து வைத்த ஏற்பாடுகள் வர உன்னை முழுவதுமாக மறக்க முயன்றிருந்தேன். உன்னை மறந்தேனோ? இல்லையோ? தனிமை தோய்ந்த சில இரவுகள் தவிர ஏனைய நேரங்களில் உன்னை நினைப்பதை தவிர்த்திருந்தேன். உன்னை, அதே மாணவத் தலைவனோடு சில முறை பார்த்ததாக நண்பன் கூறினான்.
"இவளுங்க எல்லாம் சரியான **** டா.. மொதல்ல ஒருத்தனோட சுத்துனா... அப்புறம் உன்னோட.. இப்ப துட்டு பார்ட்டி ஒருத்தன் கெடச்ச உடனே உன்ன கை கழுவிட்டு போயிட்டா பாரு.." என்று வாய்கூசாமல் பேசிய நண்பனுடன் ஏற்பட்ட சண்டையில் ஒரு வாரகாலம் மௌனவிரதம் மேற்கொள்ளும் முனிவராயிருந்தேன். அதன்பிறகு நடந்த சில செண்டிமெண்டல் சமரசங்களினாலும், உணர்வுபூர்வமான உரையாடல்களினாலும் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பியிருந்தேன்.
ஜனவரி 12.
அடையார் மலர் மருத்துவமனையில் மயக்கம் சற்று தெளிந்த நிலையில் நான். அருகில் என்னையே பார்த்தபடி நீ. நீ மட்டும். ஜூனியர் மாணவர்களுக்காக இறங்கிய அடுத்த ஆண்டுக்கான தேர்தல் களத்தில் பிரச்சனை. இரண்டு நாட்களுக்கு முன் கோட்டூர்புர சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த என்னை, சாலையில் சென்ற ஆட்டோ ஒன்றிலிருந்து நீண்ட கைகள் பற்றியிழுத்து கீழே தள்ளியதால் இடது கை முறிந்திருந்தது. உன் அருகாமை கிடைக்குமென்றால் முன்பே அடிப்பட்டு படுத்திருக்கலாம் போல் தோன்றியது.
"ஹேய்.. நீயா? எப்படி இருக்க?"
"நல்லா இருக்கேன்... நீங்க?"
"நமக்கென்ன... ராஜா மாதிரி நச்சுன்னு இருக்கேன்... என்ன... இந்த மூஞ்சில லேசா மார்க் விழுந்ததால சிவில் ஷ்வேதா இனி என்னையப் பாக்க மாட்டா. அத நெனச்சாத்தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு", இறுக்கமான சூழலை சமன்படுத்த எனக்கு தோன்றிய ஒரே ஆயுதம் நகைச்சுவை அல்லது மொக்கை. நீயோ தரையில் முழங்காலிட்டு என் தோள்பட்டை பகுதியில் முகம்புதைத்து, 'இனி நான் ஸ்லீவ்லெஸ் போட மாட்டேன்... நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்' என்று அழுது கொண்டிருந்தாய்.
"ஹேய் லூசு... உன்னைய யாரு இப்ப அதையெல்லாம் கேட்டா? நீ எப்படி இருக்கனும்னு நெனக்கிறியோ, அப்படித்தானே இருக்கனும்... அன்னைக்கு நாந்தான் பைத்தியக்காரன் மாதிரி பேசித் தொலச்சிட்டேன்..", அடிப்பட்டிருந்த கையில்தான் நீ சாய்ந்திருந்தாய் எனினும் வலியைக் காட்டிகொள்ளாமல் உன்னை சமாதானபடுத்திக் கொண்டிருந்தேன். அன்று முதல் ஆரம்பமானது, என் வாழ்வின் இரண்டாவது அத்தியாயம்.
மார்ச் 29.
முன்னூற்று அறுவத்தைந்து முறை உலகம் உருண்டாலும், மறத்தல் சாத்தானிடமிருந்து பாதுகாக்க வேண்டுவது என்றாவது ஒருநாளை மட்டுமே. அப்படியொரு நாள்தான் இன்று. சென்னையின் புறநகரைச் சேர்ந்த கசுவா கிராமத்திலிருக்கும் சேவாலயாவிற்கு நாம் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தோம். சென்னை நகர பேருந்துகளின் சதி சில சமயங்களில் நமக்கு நல்விதியாகவும் வரக்கூடும். அன்றும் சரியான நேரத்தில் பேருந்து வராததால் கல்லூரி விடுதிக்கு போய் சேர இரவு பத்தாகிவிட்டது. ஒன்பது மணிக்குள் பெண்கள் விடுதிக்கு திரும்பிவிட வேண்டுமென்பது நம் கல்லூரியின் சட்டமென்பதாலும், அதற்கு முன்பே இதுபோல் இரண்டுமுறை நீ மாட்டிக் கொண்டதாலும் இம்முறை கட்டாயமாக விடுதிக்கு செல்ல மாட்டேனென்று நீ அடம்பிடித்தாய்.
விடுதியிலன்றி வெளியில் தங்கியிருந்த நண்பனொருவனை எனதறையில் தங்க வைத்துவிட்டு உன்னை அங்கு அழைத்துச் சென்றேன். அன்றுதான் அடையாரிலிருக்கும் அந்த கையேந்தி பவனுக்கு கூட்டிச் சென்றேன். முதலில் அங்கே நீ சாப்பிட மறுத்தாலும், கடைசியில் எனது தட்டிலிருந்த தோசையையும் காலி செய்தது உனக்கு ஞாபகமிருக்குமென நினைக்கிறேன். ஆண்கள் தங்கியிருந்த இடத்திற்கு உன்னை அழைத்துச் செல்வதற்குள், யாராவது பார்த்து விடுவார்களோவென்ற அச்சத்தில் நடுங்கி எனதுடல் முழுவதும் வியர்த்திருந்தது. நீயோ, "லைஃப்ல த்ரில் வேணும் மச்சி..." என்று அசால்ட்டாக வந்தாய்.
அவ்வீட்டிலிருந்த அனைத்து மின்விளக்குகளையும் அணைத்துவிட்டு, ஒற்றை மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில், தோளோடு தோளுரசி அமர்ந்திருந்தோம். உன் எல்கேஜி தோழி முதல், என் எட்டாம்வகுப்பு தோற்றக் காதல் வரைக்கும் அனைத்தையும் பகிர்ந்துவிட்டிருந்த நமக்குள் அப்பொழுது பேசுவதற்கு எதுவுமே மிச்சமில்லை. ஜன்னல்கள் இருந்திருந்தால் காற்றின் சத்தமாவது கேட்டிருக்கும். இருள், மெழுகுவர்த்தி, தனிமை, ஈர்ப்பு என்று அனைத்தும் ஏதுவாய் இருந்தும் நமக்குள் எதுவுமே நடைபெறவில்லை. ஏன்? அந்த எண்ணம் கூட வரவில்லை. அப்படியே என் வாழ்நாள் முடிந்துவிட வேண்டுமென்றுகூட தோன்றியது. இளம் இரவு மூப்படைந்து உயிர்விட்டதுவரை நம்மிருவருக்கிடையே வளம்வந்தது வெறும் மௌன உரையாடல்கள் மட்டுமே.
அடுத்த நாள் காலை அங்கிருந்து கிளம்பும்போது எனதருகில் வந்தாய். மிக அருகில். உன்னுடன் இருக்கும் பொழுதுகளில் ஏற்பட்டிராத ஓர் உன்னத உணர்வு அப்பொழுது என்னுள் பரவ ஆரம்பித்தது. கைவிரல்களோடு விரல்கோர்த்து, உன் கால்விரல்களால் தரையூன்றி, பாதங்களை மேல்தூக்கி எம்பி, உன் இதழ்களை என் இதழ்களின் அருகில் கொண்டுவந்து நிறுத்தினாய். அப்பொழுது என் மீசைக்குள் ஊடுருவிய உன் சுவாசக்காற்றின் உஷ்ணம் இன்னமும் என் முகத்தில் மிச்சமிருக்கிறது. உன் முகம் பார்க்க முடியாமல் விழிமூடி காத்திருந்தேன் நான். சில நிமிடங்களில் எதுவுமே நடைபெறாமலிருக்க இமைதிறந்தபோது, புன்னகைத்தவாறே என் கன்னத்தில் முத்தமிட்டாய். நீண்ட நாட்களுக்கு பிறகு என் முதன்முறை பட்டியலில் மற்றுமோர் பதிவு. என் விரல்களை விடுவித்துவிட்டு, தலைகுனிந்து வெட்கப்பட்டவாறே அங்கிருந்து ஓடினாய்.
ஏப்ரல் 19.
உன்னோடு கடைசியாக செய்த ரயில்பயணம். உனக்கு விடுமுறை, எனக்கு வாழ்க்கை என்று ஆளுக்கொன்றை தந்துவிட்டுச் சென்றது கல்லூரி வாழ்க்கை. கல்லூரியின் கடைசி நாட்கள், நண்பர்கள், அறட்டை, விடுதி, விளையாட்டு, சண்டை, தேர்தல், பார்வையிடல், கலாய்ப்பு என எத்தனையையோ இழக்க போகிறேனென்பது எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை, உன் ஒருத்தியின் பிரிவின் முன்பு. உன் ஊர் வரும்வரை என் தோள்மீது சாய்ந்தபடியே வந்தாய் நீ. நம்மை தம்பதியினரெனவோ, அல்லது காதலர்கள் எனவோ எதிர் இருக்கையில் இருந்தவர்கள் நினைத்திருக்கக் கூடும்.
மே 23.
'You have a Good News and a Worst News' என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல்தான் நடந்தது அன்றும். நீண்ட தேடல்களுக்குப் பிறகு எனக்கு வேலை கிடைத்திருந்தது. அந்த மகிழ்ச்சியான தருணத்தில் நீ என் அருகில் இல்லையே என்பதுதான் என் தலையாய எண்ணமாய் இருந்தது. நீயும் நானும் காதலிக்கிறோம் என்ற உணர்வு நம் இருவருள்ளே இருந்தும் நாம் அதனை வெளிப்படுத்தவோ, அதனோடு உடன்பட்டிருக்கவோ இல்லை. உன்னிடம் என் காதலை வெளிப்படுத்தும் பல ஒத்திகைகளை பல நேரங்களில் பல இடங்களில் செய்திருந்தேன்.
நான் உன்னிடம் பேசுவதற்காக உன் அலைப்பேசிக்கு அழைத்தேன். வழமைபோல் யாரோ ஒரு பெண்ணொருத்தி நீ இல்லையென்று ஆங்கிலத்திலும் தமிழிலும் மாறி மாறி சொல்லிக் கொண்டிருந்தாள்.உன்னுடன் பேசி அன்றுடன் 23 நாட்கள் ஆகியிருந்தது. ஊருக்கு சென்றதிலிருந்து முக்கால்வாசி நேரங்கள் உன்னுடன் தொலைப்பேசியிலேயே இருந்ததனால், எனக்கு வேலை கிடைக்கும் வரையில் நாம் பேச வேண்டாமென்று அன்பு கட்டளை விதித்தாய். காதல் போதை சட்டங்களையும், கட்டளைகளையும் உடைத்தெறிந்துவிடும் என்பதனை உலகறியும். நான் மட்டும் விதிவிலக்கா என்ன? 'இதுதான் கடைசி தடவ' என்று உன்னை மறுபடியும், மறுபடியும் அழைத்ததனால், உன் செல்ப்பேசி இணைப்பையே துண்டித்திருந்தாய்.
என்றோ ஒரு நாள் உன் உறவினர் ஒருவருடைய தொலைப்பேசி எண்ணை பின்னால் நினைவுபடுத்துவதற்காக குறிக்கச் சொன்னாய். அந்த துண்டுச்சீட்டு இன்னமும் என் பர்ஸில்தான் இருக்கின்றது என்பது அப்பொழுது நினைவில் வர, அவர்களை அழைத்தேன்.
வரந்தரும் தேவதையொன்று நம் கண்முண்ணே தோன்றி என்ன வேண்டுமென்று கேட்டிருந்தால், அப்போதைய மணித்துளிகளை என் வாழ்நாளிலிருந்தே அழித்துவிடும்படி கேட்டிருப்பேன். அடுத்த ஒன்பது மணி நேரத்தில் நான் உனதறையில் இருந்தேன். நான் யாரென்பதுகூட உனக்கு முழுமையாக நினைவிலில்லாத மயக்கநிலையில் இருந்தாய். இதயங்களை விளையாட்டாய் திருடிக் கொண்டிருந்த உன் இதயத்தில் ஏதோ கோளாறென்றார்கள். 'இன்னும் கொஞ்ச நாள்தான்' என்று உன்னுயிருக்கு கெடு வைத்திருந்தார்கள்.
"பாரும்மா.. யாரு வந்திருக்காங்கன்னு பாரும்மா...", உன் தாய் என்னை உனக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்துக்குப் பிறகு என்னை கண்டுபிடித்து, மெலிதாய் புன்னகைத்து, என்னை உனதருகில் வரச் சொன்னாய்.
"நான்... உன்ட்ட... ரொம்ப நாளா... சொல்லனும்னு நெனச்சேன்... சொல்லாமலேயே போயிடுவேன்னு பயந்துட்டு இருந்தேன்... நல்ல வேளை... நீ வந்துட்ட..." என்று இடைவெளி விட்டுவிட்டு பேசினாய். விழிகளில் நீர்ததும்ப, உன் விரல்களைப் பற்றி உன்னையே வெறித்துப் பார்த்தேன்.
"ஐ லவ் யூ", என்று வேகமாக கூறிவிட்டு, அந்த நிலையிலும் வெட்கப்பட்டுக் கொண்டே முகம் திருப்பினாய். உன் பெற்றோர்களும், உறவினர்களும் நம்மிருவரையும் அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நான் சப்தமிட்டு அழுதேன்.
ஜூன் 1.
நீ மரணத்தோடு போரிட்டு வெற்றி பெற்ற நாள். அரை மாதமோ, ஆறு வருடமோ என்று உத்தரவாதமில்லாத உனதுயிரை எனக்கு திருப்பி கொடுத்த நாள். அவசரமாய் கடைக்குச் சென்று ஒரு நாட்குறிப்பு வாங்கி உன்னோடு இதுவரையில் வாழ்ந்த வாழ்க்கையை பதிவு செய்கிறேன். நாளை உன் விழிகளில் விடியுமோ? இல்லையோ?. அதுப்பற்றி கவலையில்லை. இனி உனக்காகவே, உனக்காக மட்டுமே வாழ்வதாக தீர்மானித்து விட்டேன்.
இன்றைய நெரிசல் பொழுதின்
அவசர தேவை...
தலைகோதும் நதிக்கரை
தென்றலையோ,
அந்தமாகிய அந்திமழையொன்றின்
தேனீர் வேளையைச்
சுமந்து நிற்கும் மேல்மாட முற்றத்தையோ
சற்றெனத் தந்திடும்
ஜீம்பூம்பா தேவதை...
View comments